கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ஆக வேண்டுமா?
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் சம்பளத்தில் கட் கிடையாது. அகவிலைப்படி, வாடகைப்படி என அவ்வப்போது உயர்வு உண்டு... பணிச்சுமை இல்லை. இதுவெல்லாம் அரசுப் பணிக்கு உரிய சிறப்பு என்றால் எந்த அரசாங்க ஊழியரும் அடிக்க வரமாட்டார்.
கால் காசு என்றாலும் கவர்மெண்ட் காசு என்ற சொல் வழக்கு தமிழகத்தில் மிக பிரபலம். கால் காசு அல்ல...அரசுப் பணி என்றால் இப்போது கை நிறைய காசு தரப்படுகிறது. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை உள்ளிட்ட சலுகைகளால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
இந்தச் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் அரசுப் பணிகளுக்கான தேர்வை எழுதும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பிட்டத்தக்க பணியிடம், வி.ஏ.ஓ. என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடமாகும்.
கிராம நிர்வாக அலுவலகர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டு வெற்றிக் கனியை பறித்துள்ளனர்.
வயதும், தேர்வும்: வி.ஏ.ஓ. பணியிடத்துக்கான தேர்வை எதிர்கொள்ள உங்களுக்கு 21 வயது நிரம்பி, 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
நீங்கள் புத்திசாலியான இளைஞர்கள் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை படித்தாலே போதும். தேர்வில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் அனுபவ அறிவு படைத்தவர்கள். தேர்வில் கொள்குறி வகை அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். (100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் வழியிலான மொழி வழி கேள்விகளாகவும், மேலும் 100 கேள்விகள் பொது அறிவில் இருந்தும் கேட்கப்படும்).
பத்தாம் வகுப்பு வரையுள்ள வரலாறு, சமூக அறிவியல், அறிவியல் பாடங்களை தெளிவாக படித்தாலே போதும். பொது அறிவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை நன்றாக நினைவு கூருங்கள். கடந்த காலங்களில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பை அசை போடுவதும் நல்லது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் 40 வயது வரை தேர்வை எழுதலாம். மற்ற பிரிவினர் 30 வயது வரை எழுத வாய்ப்புண்டு. ஐந்து ஆண்டுகளாக பணிநியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் அளிக்க 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்பட்டது. 45 வயது வரை ஒருவர் வி.ஏ.ஓ. தேர்வு எழுதலாம்.
படிக்காத பாமர மக்களிடம் அரசின் நலத் திட்டங்கள், அவர்களுக்கான அத்தியாவசியச் சான்றிதழ்களை வழங்குவது போன்ற மக்கள் தொடர்பு அதிகமுள்ள பணிகளில் வி.ஏ.ஓ.க்கள் ஈடுபடுகின்றனர். சுய நலமில்லாத, பொது நல நோக்குடனுடனான பணியில் இளைஞர்கள் சேர்ந்தால் அதுவும் ஒருவகையில் தேச சேவை தானே அப்ப தயாராகிடீங்களா வி.ஏ.ஓ. தேர்வுக்கு....
விரைவில் வருகிறது தேர்வுக்கான அறிவிப்பு.
What's Your Reaction?