அதிகரிக்கும் மாணவர் மரணங்கள் உணர்த்தும் செய்தி என்ன?
உலகிலேயே அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடாக இந்தியா மாறி வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் தற்கொலை என்பது ஒரு அரிதான நிகழ்வாக இருந்தது. இன்றோ இந்தியாவில் அன்றாடம் சுமார் 35 மாணவர்கள் தங்களை மரித்துக் கொள்கிறார்கள்! காரணம் என்ன?
இன்றைய கல்வி என்பது சம்பாத்தியத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவும், சமூக அந்தஸ்திற்கான அளவுகோலாகவும் மட்டுமே பார்க்கப்படுவதால், கல்வியின் நோக்கமே சிதைந்து, ஒரு மாணவன் தன்னை உணர்வதற்கே தடையாய் உள்ளது. இப்படி சமூகத்தின் பொதுபுத்தியில் படிந்துள்ள பொருளாதார வளமை மற்றும் போலி அந்தஸ்துக்கான வேட்கை பிஞ்சு மாணவர்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து, நஞ்சு சூழலுக்குள் அவர்களை தள்ளுகிறது!
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரும் தகவல்கள்படி 2021 ஆம் ஆண்டு மட்டுமே 13,000 மாணவர்கள் இறந்துள்ளனர். இதில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா- 1,834
மத்திய பிரதேஷ் – 1,308
தமிழ்நாடு – 1,246
கர்நாடகம் – 855
ஒடிசா – 834
இவை இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் ஓப்பிட்டளவில் சற்று உயர்நிலையில் உள்ள மாநிலங்கள் என்பது கவனத்திற்கு உரியது.
ஐ.ஐ.டி என்.ஐ.டி, மத்திய பல்கலைக் கழகம் போன்ற உயர்கல்வி வளாகத்தில் மட்டுமே 122 மாணவர்கள் தற்கொலைகள் செய்துள்ளனர். இவர்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒ.பி.சி பிரிவு மாணவர்களே அதிகம் மாண்டுள்ளனர்.
புற்றீசல் போல முளைத்திருக்கும் நீட் பயிற்சி மற்றும் ஜே.இ.இ பயிற்சி மையங்கள்-
ராஜஸ்தான் கோடா நகரம்
இந்தியாவின் அதி மதிப்பு வாய்ந்த உயர்கல்விக்கு மாணவர்களை தயார் செய்யும் ராஜஸ்தானின் கோடா என்ற நகரத்தை கல்வி நகரம் என அழைக்கிறார்கள். இங்கு வருடா வருடம் நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய நுழைவு தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள லட்சக்கணக்கில் மாணவர்கள் குவிகிறார்கள்! அவர்களை தயார்படுத்துவதற்கு என்றே நூற்றுக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் கடை விரித்துள்ளார்கள்! லட்ச,லட்சமாக கல்வி கட்டணங்கள் வசூலித்து மிக சொகுசான கல்வி சூழலில் மாணவர்களை பயிற்றுவிக்கிறார்கள். ஆனால், இப்படியான உயர் கல்விச் சூழலில் தான் அதிக மாணவர் தற்கொலை நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
காரணம், அங்கு கடைபிடிக்கப்படும் கல்வி கற்பித்தல் அணுகுமுறைகளாகும். காலை 6.30க்கு முதல் வகுப்பு ஆரம்பிக்குமாம். இறுதி வகுப்பு இரவு இரண்டு மணிக்கு முடியுமாம். மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் கல்வி திணிக்கபடுகிறது. சக மாணவர்களிடம் பேச முடியாது. ஊரில் உள்ள பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேச வாய்ப்பிருக்காது. சதா சர்வகாலமும் படி,படி என்ற தாரக மந்திரமாம். இந்தச் சூழலில் உருவாகும் மன அழுத்ததை வெல்ல முடியாத மாணவர்கள் சோக முடிவை எடுத்து விடுகிறார்கள். இவ்வளவு செலவழித்து, பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ள நம் பெற்றோர்களின் கனவை இந்த போட்டி யுகத்தில் போரிட்டு வசப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லை என உணரும் தருவாயில் அவன் தன்னைத் தான் மாய்த்துக் கொள்கிறான்.
சொகுசான ஹாஸ்டல் வசதி
வருடா வருடம் இந்த நகரத்தில் 20 மாணவர்களுக்கு குறையாமல் இறந்து போகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு இந்த எட்டே மாதத்தில் இது வரை மட்டுமே 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர் கல்வியின் பெயரால் பல ஆயிரம் கோடிகள் கல்லா கட்டும் இந்த சின்னஞ் சிறிய நகரம் இறந்து போகும் அல்லது கொல்லப்படும் மாணவர்களைக் கொண்டு உயிர்பித்து இருக்கும் நகரமாக இன்று அறியப்படுகிறது! கல்வியை பெரு வியாபாரமாக்கும் சூழ்ச்சியாக உருவாக்கப்பட்ட நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்திய மன அழுத்தங்களே இந்த தற்கொலைகள் என்ற குற்ற உணர்வு மத்திய ஆட்சியாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்க வேண்டாமா..?
தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகளை எடுத்துக் கொண்டால் நீட் தேர்வு தோல்விக்கு மட்டுமே இங்கு இது வரை சுமார் 15 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும், இங்கு குடும்பத்தை பிரிந்து பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்போரின் இறப்பே அதிகமாக உள்ளது. இந்தக் கல்விக் கூடங்களை நடத்தும் கருணையில்லா சாதிவெறியர்கள், காமூகர்களின் வேட்டைக்கு பலியாகும் மாணவர்கள் இங்கு பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளப்படுபவர்களாகவே பதிவாகிறார்கள். கள்ளக் குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் மாணவி ஸ்ரீமதி, மகாபாரதி பொறியியல் கல்லூரி மாணவன் அபித்குமார் ஆகியோர் இறப்பு சமிபத்திய உதாரணங்களாகும். கல்வி வாணிபத்தின் அதிகாரம் என்பது ஆட்சியாளர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத வல்லமை கொண்டதாக உள்ளது.
இந்தியா போன்ற மக்கள் தொகை நிரம்ப பெற்ற நாடுகளில் குறைந்த அளவில் உள்ள வேலை வாய்ப்புகளை வசப்படுத்தும் வேட்கையாக கல்வி கற்றுத் தரப்படுகிறது என்பதும், படிப்பு தேவைப்படாத உழைப்பு சார்ந்த தொழில்கள் இழிவாக கருதப்படுவதாலும் படிப்பு என்பதற்கு சந்தை மவுசு வலிந்து உருவாக்கப்படுகிறது.
அதுவும் குறிப்பாக மேற்படிப்புக்கு தயாராகும் மாணவர்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தற்கொலை என அழைப்பதை விட சமூகம் செய்த கொலை என்று தான் கூறத் தோன்றுகிறது.
நீ டாக்டர் ஆகாவிட்டால் உயிர் வாழத் தகுதியற்றவன் என அவர்களுக்கு போதித்தது யார் அல்லது எது?
நீ இன்ஞ்னியர் ஆகத் தேறாவிட்டால் வாழ்வதில் அர்த்தமில்லை என அவன் உள்ளத்திற்குள் அந்த உணர்வைக் கொண்டு சென்றது யார் குற்றம்?
நீட் தேர்வு திணிப்பால் தற்கொலையான தமிழக மாணவர்கள்!
பெரிய சைண்டிஸ்டாவதற்கு படிக்கும் ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி வளாகங்களில் அடிக்கடி நிகழும் மரணம் எதைக் காட்டுகிறது…? பெரிய படிப்பாளியாகத் திகழ்பவர்களாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களால் எளிய சூழலில் இருந்து வந்தவனின் உள்ளத்தை படித்து உணரும் பக்குவம் இல்லையே! கற்ற உயர் கல்விக்கும், மாண்புக்குரிய மனிதனாக வாழ்வதற்கான பக்குவத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லையே! எனில், கல்வி என்பது ஒருவனை அறியாமைக்கு அல்லவா தள்ளி இருக்கிறது!
சமூகத்தில் இருந்தும், சக மனிதர்களிடம் இருந்தும் மாணவர்களை தனிமைப்படுத்தும் எந்த முன்னெடுப்பும் கல்வியாகாது. தேர்வில் வெற்றி பெற முடிந்தாலும், அது வாழ்க்கையின் தோல்வியாகவே முடியும். தன்னைத் தான் உணரச் செய்வதும், சூழ்ந்துள்ள சமூகத்தை நேசிக்க கற்றுத் தருவதுமே கல்வியின் உன்னத நோக்கமாக இருக்க முடியும்.அறிவியல் தொழில் நுட்பங்களும், வசதி வாய்ப்புகளும் வளராத காலத்தில் இத்தனை தற்கொலைகள் நிகழவில்லையே! ஆனால், அவை வளர்ந்து சாத்தியமாகி உள்ள சமூக சூழலில் அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் எதைச் சொல்கின்றன…? நாம் ஆரோக்கியமான சமூகச் சூழலை கட்டமைக்க தவறி வருகிறோம் என்பதையே காட்டுகின்றன.
What's Your Reaction?