பழைய பத்திரங்கள் ஆய்வு கட்டாயம்: சார் பதிவாளர்களுக்கு வருகிறது ஷாக்
பழைய பத்திரங்கள் ஆய்வு கட்டாயம்: சார் பதிவாளர்களுக்கு வருகிறது ஷாக்
சென்னை-சொத்து விற்பனை பதிவின் போது, பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் அலட்சியம் காட்டும் சார் - பதிவாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தயாராகி வருகிறது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனைக்கான பத்திரங்களை பதிவு செய்யும் போது மோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக மோசடி நடப்பதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுஉள்ளன.
ஒரு கிரைய பத்திரம் பதிவுக்கு வரும் போது, அதற்கான சொத்தை விற்பவருக்கு, அந்த சொத்து எப்படி வந்தது என்பதற்கான பழைய பத்திரத்தை ஆய்வு செய்தால் போதும் என்று, பெரும்பாலான சார் - பதிவாளர்கள் நினைக்கின்றனர்.
இதற்கு முன் பதிவான நான்கு அல்லது ஐந்து பத்திரங்களின் அசல் பத்திரங்களை சரி பார்க்க வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில், எந்தெந்த பழைய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன என்ற விபரங்களை, புதிய கிரைய பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.
இதுதொடர்பாக சார் - பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பதிவுத்துறை தெளிவாக வரையறுத்து உள்ளது.
பழைய பத்திரம் காணாமல் போயிருந்தால், வங்கி அடமானத்தில் இருந்தால், அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.
சில சார் - பதிவாளர்கள் பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் தவறான அணுகுமுறையை பின்பற்றுவதாகவும், பழைய பத்திரங்களை சரி பார்க்காமல் கிரைய ஆவணங்களை பதிவுக்கு ஏற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு குறிப்பிட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில், பழைய பத்திரங்களை சரி பார்க்க வேண்டாம் என சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், சில வழக்கறிஞர்கள் கீழ் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பழைய பத்திர சரி பார்ப்புக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
இதற்கு சில சார் - பதிவாளர்கள் துணையாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
விதிவிலக்கான பத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பது கட்டாயம்.
தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் பழைய பத்திரங்கள் சரி பார்ப்பில் அலட்சியம் காட்டும் சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?