பிரச்சனையைத் தீர்க்கிறோமா... மறைக்கிறோமா?

Jul 3, 2026 - 12:37
 0  11
பிரச்சனையைத் தீர்க்கிறோமா... மறைக்கிறோமா?

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது புதிய திட்டங்களோ, அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளோ அல்ல. ஒரு பிரச்சனையின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, அதன் வேரை புரிந்துகொண்டு, நிரந்தரமான தீர்வை உருவாக்கும் நிர்வாகத் திறனே ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

ஆனால் நடைமுறையில் பல இடங்களில் நிலைமை வேறாக இருக்கிறது. ஒரு பிரச்சனை குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்படுகிறது. கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இறுதியில் எடுக்கப்படும் முடிவு, பிரச்சனையின் மூலக்காரணத்தைத் தொடாமல், வேறு சில மாற்றங்களை நோக்கிச் செல்கிறது. இதனால் பிரச்சனையின் தோற்றம் மாறலாம்; ஆனால் அதன் வேர் அப்படியே இருக்கும்.

இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, முடிவெடுக்கும் இடத்தில் சரியான நபர்களின் குரல் கேட்கப்படாதது.

ஒரு பிரச்சனையை தினமும் நேரடியாக எதிர்கொள்பவர்களின் அனுபவம் மிகவும் முக்கியமானது. அவர்களுக்குத்தான் பிரச்சனை எங்கே தொடங்குகிறது, எதனால் தொடர்கிறது, எந்தத் தீர்வு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியும். ஆனால் பல நேரங்களில் அவர்களிடம் கருத்து கேட்கப்படுவதில்லை. பிரச்சனையை தொலைவில் இருந்து பார்ப்பவர்களின் கருத்துகளே முடிவுகளாக மாறுகின்றன.

இதன் விளைவு என்ன?

பல ஆண்டுகளாக இருக்கும் அதே பிரச்சனை, புதிய பெயருடன் மீண்டும் வருகிறது. புதிய விதிமுறை, புதிய நடைமுறை, புதிய குழு என வடிவம் மாறுகிறது. ஆனால் அடிப்படைப் பிரச்சனை மட்டும் தீர்க்கப்படுவதில்லை.

ஒரு மருத்துவர் நோயின் அறிகுறிக்கு மட்டும் மருந்து கொடுத்து, நோய்க்கான காரணத்தை கண்டறியாமல் விட்டால் என்ன நடக்கும்? சில நாட்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால் நோய் மீண்டும் வரும்.

நிர்வாகத்திலும் அதே உண்மைதான்.

மூலக்காரணத்தைத் தொடாத தீர்வு என்பது தீர்வு அல்ல; அது தற்காலிகமான சமாளிப்பு மட்டுமே.

சில நிர்வாக முடிவுகளைப் பார்க்கும்போது தமிழ் திரைப்படத்தின் பிரபலமான, “இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற நகைச்சுவை வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஏற்கெனவே இருக்கும் பிரச்சனையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, தேவையற்ற புதிய மாற்றங்களை உருவாக்கினால், நேரமும் உழைப்பும் செலவாகுமே தவிர எதிர்பார்த்த மாற்றம் கிடைக்காது.

ஒரு நிறுவனத்தின் உண்மையான முன்னேற்றம், அது எத்தனை புதிய முயற்சிகளை அறிவித்தது என்பதில் இல்லை. எத்தனை பழைய பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கண்டுள்ளது என்பதில்தான் இருக்கிறது.

அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். துறைசார் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்பவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அதன்பிறகே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் மாற்றம் காகிதத்தில் மட்டும் இல்லாமல், களத்திலும் தெரியும்.

– ஜி.எஸ். பாலமுருகன்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0