தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

Oct 30, 2023 - 16:52
தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

 புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.  இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை இல்லாததன் காரணமாக, நீர்நிலைகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே காவிரி ஒழுங்காற்று குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு உத்தரவாக பிறப்பிக்கும். அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு குறிப்பிட்ட தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என்பதே இறுதி உத்தரவாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow